கூரை மீது சூரிய மின்சக்திப் படலங்களைப் பொருத்தும் திட்டத்தை முடக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக, அடுத்த ஆண்டு முதல் இலங்கையில் மின்வெட்டு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக எரிசக்தித் திட்டமிடலாளர் அசோக அபேகுணவர்தன எச்சரித்துள்ளார்.
சூரிய மின்சக்தி உற்பத்தி தொடர்பாக முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தற்போது காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முன்மொழிந்துள்ள புதிய நடைமுறையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், கூரை சூரிய மின்சக்தி அமைப்புகள் மின்சார சபை எதிர்பார்த்ததை விட வேகமாக அதிகரித்து வருவதே இந்த மாற்றங்களுக்குக் காரணமாகக் கூறப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பகல் வேளைகளில் சூரிய மின்சக்தி அமைப்புகள் அதிகளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. ஆனால், அந்த மின்சாரத்தைச் சேமித்து இரவு நேரங்களில் பயன்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை மின்சார சபை போதுமான அளவில் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, 2030ஆம் ஆண்டளவில் சூரிய மின்சக்தி உற்பத்தியின் அதிகரிப்புக்கு ஏற்ப மின்சாரக் கட்டமைப்பை நிர்வகிப்பதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், கூரை சூரிய மின்சக்தி உற்பத்தி போதுமான அளவில் கிடைக்காவிட்டால், அடுத்த ஆண்டு முதல் குறிப்பாகப் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் போன்ற வறட்சியான காலப்பகுதிகளில் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
மாற்றாக, அதிக செலவுமிக்க எரிபொருள் மின்நிலையங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும். இதனால் மின்சார உற்பத்திச் செலவு அதிகரிப்பதுடன், நுகர்வோருக்கான மின்சாரக் கட்டணங்களும் சடுதியாக உயரக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கூரை சூரிய மின்சக்தி உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சேமிப்பதற்கான வசதிகளை மேம்படுத்துவதே அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கையாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக அமைச்சரவைப் பத்திரத்தில் இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவற்றில் ஒன்றான 'Zero Export' முறையின் கீழ், உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரத்தை மின்சார சபைக்கு வழங்க முடியாது. இது பழைய 'Net Metering' முறையை ஒத்ததாக இருந்தாலும், மின்சாரம் கொள்வனவு செய்யப்படுவதும் விற்பனை செய்யப்படுவதும் ஒன்றுக்கொன்று ஈடுசெய்யப்படாத வகையில் அமையும் என அவர் விளக்கியுள்ளார்.
இதனால், முன்னர் மின்சார சபையை ஒரு வகையான மின்சாரச் சேமிப்பகமாகப் பயன்படுத்திய நுகர்வோருக்கு அந்த வசதி கிடைக்காது. சூரிய மின்சக்திப் படலங்களைப் பொருத்துவதுடன் மேலதிகமாக மின்கலங்களையும் (Battery) கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
இதன் காரணமாக, சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஆரம்பச் செலவு மேலும் அதிகரிக்கக்கூடும் என எரிசக்தித் திட்டமிடலாளர் அசோக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
