இலங்கையில் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண 'சமூக உரையாடல்' அவசியம் – ஐ.நா. வலியுறுத்தல்!

 இலங்கையில் அமைதியைப் பேணுவதற்கும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடைவதைத் தடுப்பதற்கும் 'சமூக உரையாடல்' (Social Dialogue) திட்டம் முக்கிய பங்காற்ற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

இதன் மூலம் ஊழியர்கள் மற்றும் சமூகத்தினர் தமது பிரச்சினைகளை வெளிப்படையாக முன்வைப்பதற்கும், தமது வாழ்க்கையில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்மானங்களை எடுப்பதில் பங்களிப்பதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என அச்சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தெற்காசியாவில் அரச துறை உரையாடலுக்கான முதலாவது தேசியக் கட்டமைப்பு இலங்கையில் நிறுவப்பட்டுள்ளதாகவும், அரச சேவையில் சமூக உரையாடல் தொடர்பான பிரகடனமொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களுக்குப் பதிலளிக்கும் நோக்கில் இந்தக் கூட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளின் போது அதிகரிக்கப்பட்ட வரிகள், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மக்களின் கொள்வனவு சக்தி வீழ்ச்சியடைந்தமை மற்றும் தொடர்ச்சியான வறுமை போன்ற காரணங்களால் குடும்பங்கள் எதிர்கொண்ட பொருளாதார அழுத்தங்கள் இன்னமும் நீடிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தச் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், சமூக முரண்பாடுகள் மோதல்களாக மாறுவதைத் தடுப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மீட்சியை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம், தொழில் வழங்குநர்கள், ஊழியர்கள் மற்றும் சமூகத்தினரை ஒரே தளத்தில் இணைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

மேலும், நாட்டின் பொருளாதார மீட்சியானது சிறந்த அரச சேவை, பணியிடங்களில் நியாயமான சூழல் மற்றும் மக்கள் தமது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் அதிக பங்களிப்புச் செய்யக்கூடிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

பிரச்சினைகள் தீவிரமடைந்து சமூகப் பிளவுகளாக மாறுவதற்கு முன்னரே, சம்பந்தப்பட்ட தரப்பினரை ஒன்றிணைத்து ஆக்கபூர்வமான உரையாடல்களை உருவாக்குவது அவசியம் என்றும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், மக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடைமுறை நடவடிக்கைகளையும் மேற்கொள்வது பொறுப்பான நிர்வாகத்தின் கடமையாகும் என ஐக்கிய நாடுகள் சபை மேலும் வலியுறுத்தியுள்ளது.