வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இன்று நாடளாவிய பல்கலைக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

 

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (25) நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துடன் இணைந்ததாக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் நடத்தப்படவுள்ளதாக அக்குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், பிரதான ஒன்பது தொழிற்சங்கங்களின் தலைவர்களும் கொழும்புக்கு வருகை தரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்கலைக்கழக சமூகத்தினருக்கு இருந்த உரிமைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதாகத் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

குறிப்பாக, அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் முதல் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பல்வேறு பிரச்சினைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றைத் தீர்ப்பதற்காகப் பேச்சுவார்த்தைகளின்போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பல்கலைக்கழகக் கட்டமைப்பில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இதற்காக அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், இப்பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள தொழிற்சங்கங்கள், அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்றைய வேலைநிறுத்தம் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.