இலங்கையின் கஹடகஸ்திகிலிய, மீமின்னாவல பகுதியில் அமைந்துள்ள காயன்கொல்லாவ குளத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் இருந்து தந்த யானை ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கஹடகஸ்திகிலிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளினால் குறித்த யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, யானையின் இடதுபுறத் தந்தம் காணாமல் போயிருந்தமை அதிகாரிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் தந்தம் அகற்றப்பட்டமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.
குறித்த யானை சில நாட்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், அதன் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பில் கஹடகஸ்திகிலிய வனஜீவராசிகள் அலுவலகம், திவுல்வெவ பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, காவன்திஸ்ஸ தந்த யானை உயிரிழந்து ஒரு மாதகாலம் கூட நிறைவடையாத நிலையில், மற்றுமொரு தந்த யானை உயிரிழந்துள்ள சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் காட்டு யானைகள் மற்றும் தந்த யானைகளின் பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
-1774350763-1776063998.jpg)