10 வயது மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு – குடும்பத்தினர் சோகம்

 




பொகவந்தலாவை பகுதியில் ஆற்றில் விழுந்து 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பொகவந்தலாவை, லின்பொட் தோட்டப் பகுதியில் வசித்து வந்தவரும், அங்குள்ள பாடசாலையில் 5ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்த மாணவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் நேற்று (31) மதிய வேளையில் தனது பாட்டனாருடன் கெசெல்கமுஓயா ஆற்றுக்கு அருகிலுள்ள பகுதியில் புல் வெட்டுவதற்காகச் சென்றுள்ளார்.

இதன்போது, திடீரென சிறுவன் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அவருடன் சென்ற பாட்டனார் பல இடங்களிலும் தேடிப் பார்த்த போதிலும் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் அயலவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களின் உதவியுடன் கெசெல்கமுஓயா ஆற்றில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது காணாமல் போன சிறுவன் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக சட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்காக சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் விசேட சட்ட மருத்துவ அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.