2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) பங்கேற்பதற்காக இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (02) அன்டிகுவா மற்றும் பார்புடாவைச் சென்றடைந்துள்ளார்.
அந்நாட்டின் வி.சி. பேர்ட் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த பிரதமருக்கு, அன்டிகுவாவின் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுச் சேவை விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மைக்கேல் ஜோசப் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் முக்கிய நிகழ்வாக, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்கவுள்ளார்.
இதனுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுநலவாய மகளிர் மன்றத்திலும் (Commonwealth Women's Forum) அவர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
மேலும், இந்த விஜயத்தின்போது பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் முக்கியப் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாட பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
குறிப்பாக, முதலீடுகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி, பெண்களின் வலுவூட்டல் மற்றும் உலகளாவிய சுகாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்தச் சந்திப்புகளில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்த விஜயம் இலங்கைக்கும் பொதுநலவாய உறுப்பு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
