இலங்கையை அண்மித்த வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் கீழ் வளிமண்டலக் கொந்தளிப்பு நிலை காரணமாக, நாட்டில் மழையின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி, வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இதனால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
