சவூதி பயணத் திட்டங்களில் அவதானம் தேவை: இலங்கை யாத்ரீகர்களுக்கு அறிவிப்பு......




சவூதி அரேபியாவில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளும் இலங்கையர்களுக்கு ஜித்தாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை காரணமாக, சவூதி அரேபியாவிற்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமான சேவைகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும் எனத் துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, உம்ரா யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள இலங்கை யாத்ரீகர்கள் தமது பயண ஏற்பாடுகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

யாத்திரைக்குச் செல்லத் திட்டமிடுபவர்கள் பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது விழிப்புடன் செயற்படுவதுடன், தங்களுக்குப் பொறுப்பான உம்ரா குழுப் பிரதிநிதிகள் அல்லது பயண முகவர்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவசர நிலைமைகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றைச் சமாளிக்கும் வகையில் மாற்றுப் பயணத் திட்டங்களையும் முன்கூட்டியே தயாராக வைத்திருக்குமாறு யாத்ரீகர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கையர்கள் தமது விமானப் பயண நிலவரங்களை உறுதிப்படுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பயண முகவர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியமாகும்.