நாகப்பட்டினம், கோடியக்கரை: கனடா குடியுரிமை பெற்ற இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர், படகு மற்றும் படகு மோட்டார் இயந்திரம் கொள்வனவு செய்தமை தொடர்பில் தமிழக கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஏ. போல் என அடையாளம் காணப்பட்ட குறித்த நபர், கோடியக்கரையில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் செவ்வாய்க்கிழமை காலை கியூ பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் திங்கட்கிழமை மாலை முதல் கோடியக்கரையில் தங்கியிருந்ததாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சந்தேகநபர் செப்டம்பர் 23ஆம் திகதி கனடாவிலிருந்து புறப்பட்டு, கட்டார் வழியாக செப்டம்பர் 25ஆம் திகதி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். பின்னர் சென்னையில் ஒரு நாள் தங்கியிருந்த அவர், செப்டம்பர் 27ஆம் திகதி வேதாரண்யத்திற்குச் சென்று அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். அதன் பின்னர் கோடியக்கரையில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்கு மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்ததாகக் கூறப்படும் அவர், 1.29 இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான படகு மோட்டார் இயந்திரத்தையும், 50,000 ரூபாய் பெறுமதியான பைபர் படகையும் கொள்வனவு செய்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த படகு, மோட்டார் இயந்திரம் மற்றும் ஏனைய பொருட்களைப் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றைக் கொள்வனவு செய்ததன் நோக்கம் என்ன என்பது தொடர்பில் கியூ பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், குறித்த நபர் படகு மற்றும் இயந்திரத்தைக் கொள்வனவு செய்ததற்கான உண்மையான நோக்கம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
