இலங்கையை நேரடியாகத் தாக்காத சூறாவளி! தென்மேற்குப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..

 




வங்காள விரிகுடாவின் வடக்கு அந்தமான் தீவுகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று (24) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து, நாளை (25) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து, எதிர்வரும் 26ஆம் திகதி காலை வேளையில் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் தீவிர சூறாவளியாக வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புயல் அமைப்பு இலங்கையை நேரடியாகத் தாக்காது என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அதனால் உருவாகும் காற்றோட்டத்தின் தாக்கம் காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களாலும் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.