அநுராதபுரம் புனித பூமியை நவீன வசதிகளுடன் மேம்படுத்தத் திட்டம் – ஜனாதிபதி ஆய்வு

 



அநுராதபுரம் புனித நகரத்தின் வரலாற்று, புராதன மற்றும் மத முக்கியத்துவத்தைப் பாதுகாத்து, அப்பகுதியை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் புனித பூமி அபிவிருத்தித் திட்டப் பணிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (23) பிற்பகல் நேரில் பார்வையிட்டார்.

புனித நகரத்தின் நுழைவாயில்களைப் புனரமைத்தல், பக்தர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், கழிவு முகாமைத்துவத்தை முறையாக முன்னெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இத்திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ளன.

தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட கட்டமைப்புத் திட்டத்தின் அடிப்படையில், அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, 2026 பெப்ரவரி 27ஆம் திகதி புதுப்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டமும், அதனை நடைமுறைப்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய அளவுகோல்களும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதுடன், திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 7.7 பில்லியன் ரூபாவாகும்.

அநுராதபுரம் புனித நகரத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அபிவிருத்திப் பணிகளுக்காக அடையாளம் காணப்பட்டுள்ள காணிகள் மற்றும் திட்டங்களை நேரில் பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடன் கலந்துரையாடி பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.

இதன்போது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூன்று குளங்களைச் சூழவுள்ள பகுதிகளில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்திப் பணிகளையும், மேற்கு ஆராமய விகாரை வளாகத்தில் நடைபெறும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிப் பணிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

மேலும், ருவன்வெலிசாயவிற்கு அருகிலுள்ள எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள காணியையும் பார்வையிட்ட அவர், அபிவிருத்தித் திட்டங்களுக்கான காணிகள் மற்றும் திட்ட வரைபடங்களையும் ஆய்வு செய்தார்.

அநுராதபுரம் புனித பூமியின் புராதன மரபுகள் மற்றும் மதப் பாரம்பரியங்களைப் பாதுகாத்தவாறு அனைத்து அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடித் தீர்க்கப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சாயவை வழிபட்டு ஆசி பெற்ற ஜனாதிபதி, அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான விபரங்களையும் கேட்டறிந்தார்.

அடமஸ்தானாபதி (பதில்) மற்றும் ருவன்வெலிசாய விகாராதிபதி அதிவணக்கத்திற்குரிய ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு ஆசி வழங்கினர்.

அநுராதபுரம் புனித பூமிக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் ஜனாதிபதியை அன்புடன் வரவேற்றதுடன், அவரும் பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் நலன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.