செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு!

 



வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும், அதே திசையில் மெனிக்பாம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த துவிச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வவுனியா, பெரியதம்பனை பகுதியைச் சேர்ந்த இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.