எரிபொருள் தட்டுப்பாடு: தனியார் நிறுவனங்களுக்கு வலுசக்தி அமைச்சு அதிரடி அறிவிப்பு!

 


நாட்டில் எரிபொருள் விநியோகத்தை தட்டுப்பாடின்றி முன்னெடுக்குமாறு தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான எழுத்துமூல அறிவிப்பு இன்று (06) அமைச்சின் செயலாளரால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதால், எரிபொருள் விற்பனையில் நட்டம் ஏற்படுவதாகத் தெரிவித்து நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்கள் தமது விநியோக நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக நாட்டின் ப
ல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை தொடர்பில் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக கருத்து தெரிவிக்கையில், தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் விநியோகத்தை தட்டுப்பாடின்றி மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பேணுவதை உறுதி செய்யும் வகையில் அறிவுறுத்தல்களை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அதிகளவிலான எரிபொருளை விநியோகிக்க தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் நாளை (07) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு உடனடி தீர்வை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பெற்றோலிய விநியோகத்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.