![]() |
அந்த சபையின் கொடபிட்டியே ராகுல தேரர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஞானசார தேரர் துறவற நிலையை இழக்கும் நிலையை அடைந்தவர் எனக் கருதுவதற்கோ அல்லது அவரது காவியாடையை அகற்றுவதற்கோ உரிய பாரதூரமான காரணங்கள் தமது சங்க சபைக்கு சுட்டிக்காட்டப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
சாசன ரீதியாக ஞானசார தேரர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தி, அவரது காவியாடையை அகற்றுவதா அல்லது தொடர்ந்து காவியாடையுடன் இருக்க அனுமதிப்பதா என்பது தமது மகா சங்க சபைக்குரிய பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஞானசார தேரரின் காவியாடையை அகற்றாமல், அவர் காவியாடையுடனேயே சிறைச்சாலையிலிருந்து வெளியில் தோன்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அல்லது நீதிமன்றத்தின் மேலாதிக்கம் தொடர்பில் தாம் எவ்வித எதிர்ப்பையும் வெளியிடவில்லை எனவும், எனினும் சிறைச்சாலைக்குள் ஞானசார தேரரின் காவியாடை அகற்றப்படுவது தொடர்பாக வெளியாகும் ஊடகச் செய்திகள் குறித்து தமது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு துறவி காவியாடை அணிவது அல்லது அதனை அகற்றுவது தொடர்பான சாசன ரீதியான உரிமை, சம்பந்தப்பட்ட துறவிக்கும் அவர் சார்ந்த மகா சங்க சபைக்கும் உரியது எனவும் கொடபிட்டியே ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைமுறையில் உள்ள சாசன முறைகளின்படி, இவ்வாறான நடவடிக்கைகள் உரிய பீடங்களின் அல்லது மகா சங்கத்தின் மகாநாயக்க தேரரின் அனுமதியுடன் இடம்பெற வேண்டியவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சாசன விதிகளுக்கு அமைவாக ஞானசார தேரர் காவியாடையுடன் இருப்பதற்கும், அவர் சிறைச்சாலையிலிருந்து வெளியில் அழைத்து வரப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காவியாடையுடன் தோன்றுவதற்கும் அனுமதி வழங்குவது பாரம்பரிய சாசன நடைமுறைகளுக்கு அமைவானது எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையைப் புறக்கணிப்பது சாசன மரபுகளுக்கு தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும் எனவும் கொடபிட்டியே ராகுல தேரர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.