விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் உள்ள பாதுகாப்பான பகுதியில் அவரை தடுத்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
அரசுக்குச் சொந்தமான வங்கியொன்றில் பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (07) உத்தரவிட்டது.
அத்துடன், மருத்துவச் சிகிச்சைக்காக சிரந்தி ராஜபக்ஷவை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சிரந்தி ராஜபக்ஷ நேற்று பிற்பகல் சிறைச்சாலை பேருந்து மூலம் வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் கணவரும், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பிரதீப் காரியவசம் தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
