2024ஆம் ஆண்டு குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின்படி, இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை 3,921,124 ஆக அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதமாகும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
இந்த முதியோர் மக்கள் தொகையில் 1,712,535 பேர் ஆண்கள் எனவும், 2,208,589 பேர் பெண்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, முதியோர் மக்கள் தொகையில் 43.67 சதவீதமானோர் ஆண்களாகவும், 56.33 சதவீதமானோர் பெண்களாகவும் உள்ளனர்.
முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை
2000ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க முதியோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ், 2002ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தேசிய முதியோர் செயலகமும் தேசிய முதியோர் சபையும் நிறுவப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், அவர்களின் நலனை உறுதிப்படுத்துதல் மற்றும் தேவையான சேவைகளை வழங்குதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.
முதியோர் பராமரிப்பு நிலையங்களைப் பதிவு செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல், முதியோர் பகல்நேர பராமரிப்பு நிலையங்களுக்கு உதவிகளை வழங்குதல், முதியோர் குழுக்களை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் இந்நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன.
2026ஆம் ஆண்டில் முதியோர்களுக்கு உதவித் திட்டங்கள்
2025ஆம் ஆண்டில் 44,899 முதியோர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 2026ஆம் ஆண்டில் 45,000 முதியோர் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2026ஆம் ஆண்டில் 25 முதியோர் இல்லங்களில் புனரமைப்புப் பணிகளை முன்னெடுத்து, அவற்றுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனுடன், 500 பயனாளிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே மேலும் தெரிவித்துள்ளார்.
