மத்திய அமெரிக்க நாடான குவாட்டமாலாவில், உயிரிழந்துவிட்டதாகக் கருதப்பட்டு இறுதிச் சடங்குகளுக்காக சவப்பெட்டியில் வைக்கப்பட்ட 15 வயது சிறுமி திடீரென கண்விழித்துத் தண்ணீர் கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த குறித்த சிறுமிக்கு அண்மையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட அவரது தந்தை, சிறுமியை உடனடியாக காரில் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
எனினும், வைத்தியசாலைக்குச் செல்லும் வழியில் சிறுமியின் சுவாசம் மற்றும் நாடித்துடிப்பைச் சோதித்த தந்தை, அவர் உயிரிழந்துவிட்டதாகத் தவறாகக் கருதியுள்ளார். இதனால், சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லாமல் மீண்டும் வீட்டிற்குக் கொண்டுவந்த அவர், உறவினர்களை அழைத்து இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
இதையடுத்து, சிறுமி சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் எட்டு மணி நேரம் மயக்கத்தில் இருந்ததாகக் கூறப்படும் அவர் திடீரெனக் கண்விழித்துத் தண்ணீர் கேட்டுள்ளார்.
இதனை நேரில் கண்ட உறவினர்களும் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட கிராம மக்களும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்ந்தனர். சிலர் இதனை அற்புதம் எனக் கருதி வழிபாடுகளிலும் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சிறுமிக்குத் தண்ணீர் வழங்கப்பட்டதுடன், அவர் சவப்பெட்டியிலிருந்து பாதுகாப்பாக வெளியே மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.