7 நாட்களில் ரூ.10 கோடி வசூல்! எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத விஜய் மகனின் ‘சிக்மா’?..

 


நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட்டு முதலமைச்சராகியுள்ள நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகத் திரையுலகில் அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

விஜய் சினிமாவிலிருந்து விலகியுள்ள சூழலில், அவரது மகனின் சினிமா வருகையை ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடிப்பில் ‘சிக்மா’ திரைப்படம் உருவானது.

பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ள லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியான முதல் நாளில் ஜேசன் சஞ்சயின் தாயாரும் சகோதரியும் ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் படத்தைப் பார்த்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டதால், திரைப்படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், படம் வெளியாகி ஏழு நாட்கள் கடந்துள்ள நிலையில், எதிர்பார்த்த அளவிலான வரவேற்பைப் பெறவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை ‘சிக்மா’ திரைப்படம் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வசூல் படத்தின் தயாரிப்புச் செலவு மற்றும் ஏனைய செலவுகளுடன் ஒப்பிடுகையில் போதுமானதாக இல்லை என்றும், இதனால் படத்துக்கு நஷ்டம் ஏற்படக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், திரைப்படத்தின் உண்மையான வசூல், தயாரிப்புச் செலவு மற்றும் விநியோக உரிமைகள் தொடர்பான அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகினால்தான் அதன் வணிக நிலையைத் துல்லியமாக மதிப்பிட முடியும்.