முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதி

 



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (12) கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிருலப்பனையில் அமைந்துள்ள தனது இல்லத்தில் இருந்தபோது அவருக்கு இதயம் தொடர்பான பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை

மகிந்த ராஜபக்சவுக்கு நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்கள் குழுவினரால் தேவையான மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கடந்த சில நாட்களாக அவர் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், தனது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவைச் சந்திப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்குச் செல்ல அவர் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், இன்று காலை திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அந்தத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.