சட்டத்தரணி தம்பதி கொலை: போலி கடவுச்சீட்டு தயாரித்ததாக ஒருவர் கைது





தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை தயாரிக்க உதவியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2026 பெப்ரவரி 13ஆம் திகதி தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்குரேகொட பகுதியில் உள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றுக்கு முன்பாக சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், மேலதிக விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபர் 2026 ஒக்டோபர் 07ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின்போது, பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி கடவுச்சீட்டை தயாரிக்கும் நடவடிக்கையில் குறித்த நபர் உதவியுள்ளதாகவும், போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீனுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்குரேகொட இரட்டைப் படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்ற வலையமைப்பு தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.