சர்வதேச சட்டத்தையும் அமைதியையும் வலுப்படுத்திய சேவைக்காக 2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் “நவி” பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளித் தமிழரான நவநீதம் “நவி” பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியை மேம்படுத்துவதற்கும் சர்வதேச சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக நோர்வே நோபல் குழு தெரிவித்துள்ளது.
1941ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் இந்தியத் தமிழ் வம்சாவளிக் குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதித்துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட சட்ட நிபுணராவார்.
தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடியவர்களுக்கு சட்ட உதவி வழங்கியதன் மூலம் தனது சட்டப் பணியை ஆரம்பித்த அவர், பின்னர் சர்வதேச அளவில் நீதிக்காகவும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் தொடர்ந்து பணியாற்றினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராக 2008 முதல் 2014 வரை பணியாற்றிய நவநீதம் பிள்ளை, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய நீதித்துறை அமைப்புகளிலும் பதவி வகித்துள்ளார்.
குறிப்பாக, ருவாண்டா தொடர்பான சர்வதேச குற்றவியல் விசாரணைகளில் பாலியல் வன்முறைகள் மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகியவை இனப்படுகொலை உள்ளிட்ட சர்வதேசக் குற்றங்களுடன் தொடர்புபடுத்தப்படுவதற்கான சட்ட முன்னேற்றங்களில் அவர் முக்கிய பங்காற்றினார்.
மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவுக்கும் அவர் தலைமை தாங்கியுள்ளார். சர்வதேச சட்டத்தை மீறுபவர்கள் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும் என்பதில் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலைமை, காணி உரிமைகள் மற்றும் ஊடகச் சுதந்திரம் போன்ற விடயங்களும் சர்வதேச மனித உரிமை விவாதங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
நவநீதம் பிள்ளையின் நீண்டகால மனித உரிமைப் பணிகளும் சர்வதேச நீதித்துறைக்கான பங்களிப்புகளும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
போர்கள் மற்றும் சர்வதேச மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், நீதியை நிலைநாட்டுவதற்கும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் சர்வதேச சட்டத்தின் முக்கியத்துவத்தை இந்த விருது மீண்டும் வலியுறுத்துகிறது.
.jpg)