இந்தியாவின் தமிழ்நாடு, தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இரு குழந்தைகளுடன் தாய் ஒருவர் தீக்குளித்த சம்பவத்தில் மூவரும் உயிரிழந்துள்ளனர்.
சிவகிரி அருகேயுள்ள வடக்குசத்திரம் பகுதியைச் சேர்ந்த காளிப்பாண்டி (33) என்பவருக்கும், விருதுநகர் மாவட்டம் தேவதானம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (25) என்பவருக்கும் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களுக்கு கபினேஷ்வரன் (5), ரபினேஷ்வரன் (4) என இரு மகன்கள் இருந்துள்ளனர்.
காளிப்பாண்டிக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், இதன் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் நடைபெற்ற கோவில் கொடை விழாவுக்கு கடந்த 05ஆம் திகதி இரவு மாரியம்மாள் தனது இரு மகன்களுடன் சென்றுள்ளார். அங்கு அவர் பெண்களுடன் கும்மியடித்துக் கொண்டிருந்தபோது, மதுபோதையில் அங்கு வந்த அவரது கணவர் அவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த மாரியம்மாள் தனது இரு மகன்களையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
பின்னர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை பயன்படுத்தி மாரியம்மாளும் அவரது இரு மகன்களும் தீக்காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து, மூவரையும் மீட்டுள்ளனர்.
எனினும், பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இரு குழந்தைகளும் சிகிச்சைக்காக அரச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கபினேஷ்வரன் மற்றும் ரபினேஷ்வரன் ஆகிய இருவரும் நேற்று (06) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
