பொலன்னறுவை, கல்தம்பராவ – நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் 31 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையொருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இன்று (31) காலை மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் ஈஸ்வரகே தொன் தில்ஷான் மதுஷங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸாரிடம் உயிரிழந்தவரின் மனைவி வழங்கிய தகவலின்படி, நேற்று (30) பிற்பகல் அவரது கணவர் நண்பர்களுடன் மதுபானம் அருந்திய பின்னர் வீட்டுக்கு அருகில் வந்துள்ளார்.
இதன்போது கணவன் – மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.
எனினும், இரவு முழுவதும் அவர் வீடு திரும்பாத நிலையில், இன்று காலை வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள பிரதான வீதியில் ஒருவர் காயங்களுடன் வீழ்ந்து கிடப்பதை மனைவி அவதானித்துள்ளார்.
அருகில் சென்று பார்த்தபோது, அவர் தனது கணவர் என்பதை அடையாளம் கண்டதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பில் கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மதுபானம் அருந்திய பின்னர் ஏற்பட்ட மோதலின் காரணமாக அவர் உயிரிழந்தாரா அல்லது வீதியில் விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தாரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
பொலன்னறுவை பொலிஸாரின் பல குழுக்கள் இணைந்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
