“ஒவ்வொரு பிள்ளைக்கும் பாதுகாப்பான எதிர்காலம் உறுதி செய்யப்படும்” – ஜனாதிபதி...



சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாரபட்சங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பெறுமதியான வளமாக சிறுவர்களைக் கருதுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்களின் உடல் மற்றும் உள நல்வாழ்வைப் பாதுகாப்பதுடன், முறையான வளர்ச்சிக்குத் தேவையான சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் கற்பனைத் திறன், எதிர்பார்ப்புகள் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை எதிர்கால நாட்டின் பாதையை தீர்மானிக்கும் காரணிகளாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு பிள்ளைக்கும் கல்வி, வழிகாட்டல், சமூகப் பாதுகாப்பு, விளையாட்டு, ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் சமமான வாய்ப்புகளை வழங்குவதுடன், போஷாக்கு மற்றும் சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், சாதி, மதம், பொருளாதார நிலை அல்லது புவியியல் பின்னணி உள்ளிட்ட எந்தவொரு காரணமும் ஒரு பிள்ளையின் கல்வி மற்றும் சீரான வளர்ச்சிக்கு தடையாக இருக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு பிள்ளையும் தனது திறமைகளை வெளிக்கொணர்ந்து, தனது கனவுகளை அடைவதற்கும் விரும்பிய எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் சமமான மற்றும் நியாயமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்காக நாட்டின் கல்வித்துறையை புதிய மாற்றத்திற்கு உட்படுத்தும் வகையில், நவீன உலகிற்கு ஏற்ற திறன் அடிப்படையிலான கல்வி முறையை உருவாக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறுவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதற்காக அனைவரையும் ஒன்றிணைத்து “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புதிய இலங்கையில் எந்தவொரு பிள்ளையையும் கைவிடாமல், அனைத்து பிள்ளைகளும் பாதுகாப்பான சூழலில் வளர்வதற்கான வாய்ப்புகளை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்விக்கான புலமைப்பரிசில்களை விரிவுபடுத்துதல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் வளர்ந்து வரும் அல்லது பராமரிப்பு தேவைப்படும் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட திட்டங்களின் அடிப்படை நோக்கம், நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் பாதுகாப்பான மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதாகும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய சிறுவர்கள் தின வாரத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் சிறுவர்களின் உரிமைகள், நல்வாழ்வு, பாதுகாப்பு, கல்வி மற்றும் சுதந்திரத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளையும் ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.