அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மாற்றுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் உட்பட நான்கு பேர் கொண்ட குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை (5) சவுதி அரேபியாவுக்கு செல்லவுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சவுதி அரேபியாவில் உள்ள இரண்டு சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்குத் தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமஞ்ஞ மகா நிகாய மற்றும் அமரபுர மகா நிகாய ஆகிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அண்மையில் ஜனாதிபதியிடம் மனுவொன்றை கையளித்துள்ளனர்.
அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மாற்றுமாறு கோரி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சவுதி அரேபிய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு ஒன்றும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த விவகாரத்தை சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மிகவும் நெருக்கமாகக் கண்காணித்து வருவதுடன், இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக சவுதி அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம், சமூக ஊடகங்களில் அனோஜன் சிவராசா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் ஆரம்பத்தில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவுதி ரியால் அபராதமும் விதித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, அனோஜன் தரப்பினரால் குறித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. பின்னர், அந்தத் தண்டனைக்கு எதிராக நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்ட பின்னர், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா, தொழில் நிமித்தம் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார்.