கட்டுமானத் துறையின் தடைகளை நீக்கி புத்துயிர் அளிக்க வேண்டும் – ஜனாதிபதி

 




இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகளுக்கும் நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கும் கட்டுமானத் துறை நேரடியாகப் பங்களிப்பு செய்வதால், அத்துறையில் நிலவும் தடைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்கி புத்துயிர் அளிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (30) பிற்பகல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் கட்டுமானத் துறையின் முக்கிய பங்குதாரர்களுக்கு இடையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, கட்டுமானத் துறையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலப் போக்குகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துறையை மீள வலுப்படுத்தி நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பங்குதாரர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளையும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

மேலும், தற்போதைய சூழலில் கட்டுமானத் துறை எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்துரைக்கப்பட்டது.

கட்டுமானத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய தலையீடுகள் குறித்தும் கலந்துரையாடலின்போது விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.