ஜப்பான் சந்தைக்காக BYD அறிமுகப்படுத்திய புதிய RACCO மின்சார கார்.


ஜப்பானின் போட்டி நிறைந்த வாகனச் சந்தைக்காக BYD நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்துள்ள புதிய RACCO மின்சார வாகனம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பான் முழுவதும் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளின் ஊடாக RACCO அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் ஜப்பானின் தனித்துவமான ‘Kei Car’ சிறிய ரக வாகனப் பிரிவில் BYD அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது.

BYD குழுமத்தின் துணைத் தலைவர் லியூ ஷுயெலியாங் உள்ளிட்ட நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் RACCO வாகனத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தினர்.

ஜப்பானிய மக்களின் அன்றாடப் பயணத் தேவைகளை கருத்தில் கொண்டு RACCO வடிவமைக்கப்பட்டுள்ளதாக BYD தெரிவித்துள்ளது. சிறிய வெளிப்புற பரிமாணங்களுடன் அதிக உட்புற இடவசதி, பாதுகாப்பு மற்றும் பயணச் சௌகரியம் ஆகிய அம்சங்களுக்கு வாகனத்தின் வடிவமைப்பில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஜப்பானுக்காக பிரத்யேக வடிவமைப்பு

வெளிநாட்டு சந்தையின் கடுமையான தரநிலைகளை கருத்தில் கொண்டு BYD உருவாக்கிய முதல் பிரத்யேக வாகனமாக RACCO அமைந்துள்ளது.

மேலும், ஜப்பானின் கடுமையான Kei Car விதிமுறைகளுக்கு அமைவாக வெளிநாட்டு வாகன உற்பத்தியாளர் ஒருவர் பெருமளவில் தயாரிக்கும் முழுமையான மின்சார வாகனம் என்ற வகையிலும் RACCO அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானின் Kei Car பிரிவு, வாகனத்தின் பரிமாணங்கள், இயந்திரத் திறன் மற்றும் பிற தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும். ஜப்பானின் புதிய வாகன விற்பனையில் இந்தப் பிரிவு முக்கிய பங்கு வகிப்பதாக BYD தெரிவித்துள்ளது.

இந்தச் சந்தையின் தேவைகளை கருத்தில் கொண்டு, ஜப்பானின் வீதி நிலைமைகள், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் Kei Car விதிமுறைகளுக்கு ஏற்ப RACCO உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

இதற்காக வாகனத்தின் கட்டமைப்பு, பேட்டரி அமைப்பு, மின்சார இயக்கத் தொழில்நுட்பம், chassis மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக BYD தெரிவித்துள்ளது.

இலங்கை சந்தையிலும் RACCO?

RACCO அறிமுகம் தொடர்பில் கருத்து தெரிவித்த John Keells CG Auto நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன, ஜப்பானின் Kei Car தரநிலைகளுக்கு ஏற்ப துல்லியம், செயல்திறன் மற்றும் இடவசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு RACCO வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வெளிப்புறத்தில் சிறியதாகவும் உட்புறத்தில் விசாலமாகவும் காணப்படும் இதன் வடிவமைப்பு இலங்கை வாடிக்கையாளர்களுக்கும் பொருத்தமானதாக இருக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் RACCO மாதிரியையோ அல்லது இலங்கைச் சந்தைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட அதன் பதிப்பையோ BYD வாகன வரிசையில் இணைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஜப்பானிய உள்நாட்டு சந்தை வாகனங்களுக்கு நீண்டகாலமாக வரவேற்பு காணப்படுவதால், BYD நிறுவனம் Kei Car பிரிவில் நுழைந்திருப்பது இலங்கைச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

BYD-யின் உலகளாவிய விரிவாக்கத் திட்டம்

RACCO, குறிப்பிட்ட சந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப வாகனங்களை வடிவமைத்து உருவாக்கும் BYD நிறுவனத்தின் அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் பல்வேறு சந்தைகளுக்கு ஒரே மாதிரியான தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக, ஒவ்வொரு சந்தையின் தேவைகளையும் கருத்தில் கொண்டு ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் உள்ளூர்மயமாக்கலை முன்னெடுப்பதே நிறுவனத்தின் நோக்கம் என BYD குறிப்பிட்டுள்ளது.

இதுவரை BYD நிறுவனத்தால் பெருமளவில் தயாரிக்கப்பட்ட மிகச்சிறிய வாகனமாக RACCO அமைவதாகவும், இது நிறுவனத்தின் புதிய ஆற்றல் வாகன வரிசையை மேலும் விரிவுபடுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் Kei Car சந்தையில் RACCO அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது BYD ஜப்பான் நிறுவனத்தின் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. அதேவேளை, உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திறன்களைப் பயன்படுத்தி பிராந்திய சந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப புதிய வாகனங்களை உருவாக்கும் BYD-யின் உலகளாவிய மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவும் இது அமைந்துள்ளது.