22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது, தமது மனசாட்சிக்கு அமைவாக வாக்களிக்குமாறு சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ள அவர், நாட்டின் ஜனநாயக வரலாற்றில் முக்கியமானதாக அமையக்கூடிய இந்தத் தருணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மனசாட்சிக்கு அமைவாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திலித் ஜயவீரவின் கோரிக்கை
தாம் அரசியல் எதிரியாக அல்லாமல், நாட்டின் எதிர்காலம் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் குறித்து சிந்திக்கும் சக நாடாளுமன்ற உறுப்பினராகவே இந்தக் கடிதத்தை அனுப்புவதாக திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புடன் இணக்கமானதா என்பது தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிப்பதாகவும், அதனை எந்த வகையான பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்பது தொடர்பிலும் நீதிமன்றத்தின் தீர்மானம் முக்கியமானதாக இருப்பதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சட்டமூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பான அரசியல் தீர்மானம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் மற்றும் நீதித்துறை தொடர்பில் கருத்து
தற்போது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள சிலர், தங்களது அரசியல் பயணத்தில் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் சுயாதீன நீதித்துறைக்காகக் குரல் கொடுத்துள்ளதாகவும் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான கடந்தகால அரசியல் நிலைப்பாடுகளையும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுயாதீன நீதித்துறை என்பது நாட்டின் ஜனநாயக அமைப்பில் முக்கியமான நிறுவனமாக இருப்பதாகவும், நீதித்துறை பலவீனமடைந்தால் சாதாரண குடிமக்களுக்கு சட்டத்தின் கீழ் கிடைக்கும் பாதுகாப்பு பாதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மக்களின் வாக்கை நினைவில் கொள்ள வேண்டும்”
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வழிகாட்டுதல்களுக்கு அப்பால், தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்புகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு முக்கியமான தேசிய விவகாரத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் எவ்வாறு வாக்களித்தார்கள் என்பது எதிர்காலத்தில் அரசியல் வரலாற்றில் பதிவாகும் எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு மக்கள் வாக்கெடுப்பு தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் செப்டம்பர் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். மேலும், சட்டமூலத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று (24) மற்றும் நாளை (25) நடைபெறவுள்ள நிலையில், இரண்டு சட்டமூலங்கள் மீதான வாக்கெடுப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.