நடிகர் கருணாஸின் மகனான கென் கருணாஸ், தனது இயல்பான நடிப்பின் மூலம் தனக்கென ரசிகர்களை உருவாக்கியுள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தில் அவரது மகனாக நடித்து கவனம் பெற்ற கென் கருணாஸ், தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.
இதையடுத்து, ‘யூத்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கினார். தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் உள்ளிட்டோர் நடித்த இந்தத் திரைப்படம் கடந்த மார்ச் 19ஆம் திகதி வெளியானது.
பாடசாலை வாழ்க்கையை மையமாகக் கொண்டு ரகளை, காதல், ஏமாற்றம் உள்ளிட்ட அம்சங்களுடன் நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட ‘யூத்’ திரைப்படம் இளம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.
ஹீரோவாக கென் கருணாஸ்
‘யூத்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கென் கருணாஸ், தற்போது கதாநாயகனாக நடிக்கும் தனது அடுத்த திரைப்படத்தை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தை இயக்கிய செல்லா அய்யாவு, கென் கருணாஸின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கதையை கேட்ட கென் கருணாஸ் குடும்பத்தினரும் அதனை மிகவும் ரசித்ததாகவும், கதையின் நகைச்சுவை அம்சங்கள் அவர்களை வெகுவாக கவர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
டிசம்பரில் படப்பிடிப்பு ஆரம்பம்?
‘யூத்’ திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்த விக்கி, கென் கருணாஸின் புதிய திரைப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், திரைப்படத்தின் தலைப்பு, ஏனைய நடிகர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு திகதி தொடர்பான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.