இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழை – 50 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று (04) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.
எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, செப்டெம்பர் 07 வரை சூரியன் உச்சம்
இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் 07ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
இதற்கமைய, இன்று (04) நண்பகல் 12.09 மணியளவில் நிட்டம்புவ, அல்கம, மல்வானை, அரநாயக்க மற்றும் மீகஹாகிவுல உள்ளிட்ட பகுதிகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
