இலங்கையில் வறட்சி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,000ஐ கடந்தது!!

 

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,000ஐ கடந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 96,584 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 29,584 குடும்பங்களைச் சேர்ந்த 94,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் மொனராகலை மாவட்டத்திலேயே வறட்சியின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மொனராகலை மாவட்டத்தில் மாத்திரம் 11,751 குடும்பங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.