இங்கிலாந்து தொடரில் இருந்து குசல் மெண்டிஸ், பிநுர பெர்னாண்டோ நீக்கம்!!

 இங்கிலாந்துக்கு எதிரான இலங்கை அணியின் எதிர்வரும் இருபதுக்கு 20 (T20) தொடரிலிருந்து அணித் தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் பிநுர பெர்னாண்டோ ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் போது ஏற்பட்ட காயங்களில் இருந்து இருவரும் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் இன்று (4) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LPL தொடரின்போது குசல் மெண்டிஸ் வலது காலிலும், பிநுர பெர்னாண்டோ முதுகுப் பகுதியிலும் காயமடைந்திருந்தனர்.

இதற்கமைய, இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடருக்கான இலங்கை குழாமில் குசல் மெண்டிஸுக்கு பதிலாக பவன் ரத்நாயக்கவும், பிநுர பெர்னாண்டோவுக்கு பதிலாக தில்ஷான் மதுஷங்கவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், குசல் மெண்டிஸ் இல்லாத நிலையில் இலங்கை T20 அணியை வழிநடத்தும் பொறுப்பு சரித் அசலங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக மூன்று போட்டிகளைக் கொண்ட T20 தொடர் நடைபெறவுள்ளது. தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 15ஆம் திகதி சவுத்தாம்ப்டனில் நடைபெறவுள்ளது.