நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிகாரபூர்வ கடிதத் தலைப்புகள் மற்றும் முத்திரைகளைப் போலியாகத் தயாரித்து, அரசாங்க வேலைவாய்ப்புகள், வீடுகள் மற்றும் கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாகக் கூறப்படும் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா பிராந்திய குற்றவியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரும், நுவரெலியா, ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளில் தொலைத்தொடர்பு நிலையங்களை நடத்தி வந்த சிலரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள், நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தியதுடன், அலுவலகத்தின் பதில் கணக்காளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரின் போலி கையொப்பங்களையும் பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பணம் வழங்கிய சிலருக்கு வழங்கப்பட்ட கடிதங்களுக்கு பதில் கிடைக்காத நிலையில், அவை தொடர்பாக மாவட்ட செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
இதன்போது குறித்த கடிதங்களில் பயன்படுத்தப்பட்டிருந்த கடிதத் தலைப்புகள் மற்றும் அதிகாரிகளின் கையொப்பங்கள் போலியானவை என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, மாவட்ட செயலாளர் நுவரெலியா பிராந்திய குற்றவியல் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளைச் சேர்ந்த மேலும் சிலரின் உதவியுடன் சந்தேகநபர்கள் பொதுமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டதாகக் கண்டறிந்துள்ளனர்.
பெற்றுக்கொண்ட பணத்திற்கு ஆதாரமாக வழங்கப்பட்ட கடிதங்களில் போலி முத்திரைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து போலி முத்திரைகள், போலியாகத் தயாரிக்கப்பட்ட கடிதத் தலைப்புகள் மற்றும் அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கணினிகள் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாவட்ட செயலாளரின் பெயரிலும் மோசடி
இதனிடையே, தனது பெயரையும் மேலதிக மாவட்ட செயலாளரின் பெயரையும் பயன்படுத்தி பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாகக் கூறி பிரதேசவாசிகளிடம் பணம் திரட்டப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வுகளில் தாம் கலந்துகொள்ளவுள்ளதாக முதலில் தெரிவித்து, பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களால் தம்மால் கலந்துகொள்ள முடியவில்லை என தொலைபேசி ஊடாக அறிவித்து, கூட்டங்களை நடத்துமாறு தெரிவிக்கும் முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில், பிராந்திய குற்றவியல் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)