இலங்கையில் நீர் வெறுப்பு நோயை (Rabies) முழுமையாக ஒழித்தல், நாய்களைப் பதிவு செய்தல் மற்றும் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களைக் கொண்ட புதிய சட்டமூலம் இன்று (24) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவினால் இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நாட்டிலிருந்து நீர் வெறுப்பு நோயை முற்றாக ஒழிக்கும் நோக்கில் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை முறையாக ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டமூலம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வணிக நோக்கங்களுக்காக நாய்களைப் பெருக்குவதை கடுமையாக ஒழுங்குபடுத்துதல் மற்றும் நாட்டில் நாய்களைப் பதிவு செய்வதற்கான முறையான கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவையும் சட்டமூலத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
மேலும், நீர் வெறுப்பு நோயை ஒழிப்பதற்கான தேசிய ஆலோசனைக் குழு மற்றும் பிரதேச ஆலோசனைக் குழுக்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் புதிய சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தச் சட்டமூலம் நடைமுறைக்கு வந்தால், தற்போது அமுலில் உள்ள நீர் வெறுப்பு நோய் தொடர்பான கட்டளைச் சட்டம் (அதிகாரம் 476) மற்றும் நாய்கள் பதிவு தொடர்பான கட்டளைச் சட்டம் (அதிகாரம் 477) ஆகிய பழைய சட்டங்கள் நீக்கப்படவுள்ளன.
இதனுடன் தொடர்புடைய மற்றும் அதனுடன் இணைந்த விடயங்களுக்கு தேவையான சட்ட ஏற்பாடுகளைச் செய்வதற்கும் இந்தப் புதிய சட்டமூலம் வழிவகுக்கிறது.
இந்நிலையில், சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாளை (25) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
