நாட்டில் நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நில்வலா மற்றும் கிங் கங்கைகளின் நீர்மட்டம் சிறு வெள்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட, கொடபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, கம்புருபிட்டிய மற்றும் திஹகொட பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், காலி மாவட்டத்தின் தவலம, நாகொட, பத்தேகம மற்றும் வெலிவிட்டிய – திவித்துர பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சிறு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
இதேவேளை, தொடர் மழை காரணமாக பல மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, நோர்வூட் மற்றும் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கண்டி மாவட்டத்தின் உடபலாத்த மற்றும் கங்க இஹல கோரளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், காலி மாவட்டத்தின் நியங்கம, தவலம, நெலுவ மற்றும் நாகொட பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, அரநாயக்க, தெரணியகல, மாவனெல்ல மற்றும் எட்டியாந்தோட்டை பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாத்தறை மாவட்டத்தின் கொடபொல, பஸ்கொட மற்றும் பிட்டபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, காலி, கேகாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை
இதனிடையே, நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை
மேற்கு-மத்திய மற்றும் அதனை அண்மித்த வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை அண்மிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நேரடி தாக்கம் இலங்கைக்கு இல்லை என்ற போதிலும், அந்தத் தொகுதியை நோக்கி ஈர்க்கப்படும் காற்றின் காரணமாக நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், மறு அறிவித்தல் வரை மீனவர்கள் மற்றும் கடல்சார் பணியாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் தங்களது பகுதிகளில் வெளியிடப்படும் வெள்ளம் மற்றும் மண்சரிவு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களை அவதானித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
