அத்துடன், இலங்கையின் கடன் தரப்படுத்தலுக்கான கண்ணோட்டம் ‘நிலையானது’ (Stable Outlook) என Fitch Ratings தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நிதியியல் அபாயங்களைக் குறைப்பதற்கும் பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பேரண்டப் பொருளாதார ஸ்திரப்படுத்தல் கொள்கைகள் இந்த தரப்படுத்தல் உயர்வுக்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளதாக Fitch Ratings சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், நாட்டின் நாணய மற்றும் வெளிப்புற சமநிலைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அத்துடன் அந்நியச் செலாவணி கையிருப்பு படிப்படியாக மீளக் கட்டமைக்கப்பட்டுள்ளமை ஆகியவையும் தரப்படுத்தல் உயர்வுக்கு பங்களித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான நிதி ஒழுக்கத்தைப் பேணுதல் மற்றும் அரசாங்க வருவாய் திரட்டலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தால், நிலையான முதன்மை வரவு–செலவுத் திட்ட உபரி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் Fitch Ratings குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதுடன், எதிர்காலத்தில் வெளிப்புற சமநிலையற்ற தன்மை மீண்டும் உருவாகும் அபாயத்தையும் குறைக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடரும் பொருளாதார சவால்கள்
எவ்வாறாயினும், இலங்கை இன்னும் பல்வேறு பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருவதாக Fitch Ratings சுட்டிக்காட்டியுள்ளது.
கடன் மறுசீரமைப்பு மற்றும் பேரண்டப் பொருளாதார சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் கடன் அளவும் கடன் சேவைப் பொறுப்புகளும் ஒப்பிடப்படும் தரப்படுத்தல் பிரிவிலுள்ள பல நாடுகளை விட உயர்ந்த நிலையில் காணப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் வெளிநாட்டு கடன் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடிய நிலையில், அவற்றைச் சமாளிக்கும் வகையில் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் Fitch Ratings சுட்டிக்காட்டியுள்ளது.
Fitch Ratings-ன் மதிப்பீட்டு அளவுகோலில் ‘B’ வகை தரப்படுத்தல்கள் அதிக கடன் அபாயத்தைக் கொண்டதாகக் கருதப்படுகின்றன; அதேவேளை ‘CCC’ வகை தரப்படுத்தல்கள் கணிசமான கடன் அபாயத்தைக் குறிக்கின்றன.
.jpeg)