கட்சித் தீர்மானத்தை விட மக்கள் வாக்குறுதியே முக்கியம் – திலித் ஜயவீர

 



கொழும்பு: 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற வாக்கெடுப்பில், தமது மனசாட்சிக்கு அமைவாக அதற்கு எதிராக வாக்களிக்குமாறு சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர, சக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில், அரசியல் எதிரியாக அல்லாமல், நாட்டின் எதிர்காலம் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் குறித்து அக்கறை கொண்ட சக பாராளுமன்ற உறுப்பினராகவே தாம் இந்தக் கடிதத்தை அனுப்புவதாக திலித் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணங்குகிறதா என்பதை ஆராய்வதும், அது தொடர்பில் எவ்வாறான பெரும்பான்மை தேவை என்பதை தீர்மானிப்பதும் நீதிமன்றத்தின் பணியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த திருத்தத்தினால் நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை ஏற்படுமா என்பதை தீர்மானிப்பது நீதிமன்றத்தின் பொறுப்பு அல்ல என்றும், அது பாராளுமன்ற உறுப்பினர்களின் மனசாட்சிக்கு விடப்பட்டுள்ள விடயம் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய ஆளும் கட்சியைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் வாழ்க்கையில் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் சுயாதீன நீதித்துறைக்காக குரல் கொடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது பலர் அதற்கு எதிராகக் குரல் கொடுத்ததையும் அவர் நினைவூட்டியுள்ளார்.

சுயாதீன நீதித்துறை என்பது சுதந்திரமான நாட்டின் முக்கியமான தூண்களில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டுள்ள திலித் ஜயவீர, நீதித்துறை பலவீனமடையும் போது சாதாரண குடிமக்களுக்கு பலம்பொருந்தியவர்களுக்கு எதிராகக் கிடைக்கும் இறுதிப் பாதுகாப்பு அரண் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சியின் தீர்மானங்களுக்கு மாத்திரம் கட்டுப்பட்டு செயற்படுவதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை என்றும், மக்கள் வழங்கிய நம்பிக்கையையும் வாக்குறுதிகளையும் கருத்தில் கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது தேர்தல் தொகுதியின் வாக்காளர்களாலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“திருத்தங்கள் வரும், போகும். ஆனால், ஒரு தீர்மானமிக்க தேசியப் பிரச்சினையில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் எவ்வாறு வாக்களித்தார்கள் என்பதை வரலாறும், அவர்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களும் நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்திருப்பார்கள்” என திலித் ஜயவீர தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு அவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கான தீர்மானத்திற்குக்கூட வரலாறு முக்கியத்துவம் அளிக்கும் எனவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

“தாய்நாடு அமைதியாக, ஆனால் நம்பிக்கையுடன் உங்களை எதிர்நோக்கியுள்ளது” எனக் குறிப்பிட்டு, தமது கடிதத்தை அவர் நிறைவு செய்துள்ளார்.