BestWeb.LK Awards 2026 நிகழ்வில் Lina Manufacturing நிறுவனம் இரட்டை விருதுகளை வென்று பெருமை பெற்றுள்ளது.
இதன்படி, சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு (Best Health & Wellness) பிரிவில் தங்க விருதையும், அதனுடன் சிறந்த மொபைல் பயனர் அனுபவத்திற்கான (Best Mobile User Experience) விருதையும் Lina Manufacturing நிறுவனம் வென்றுள்ளது.
இந்த விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் Monarch Imperial ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சப்புதந்திரி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
LK Domain Registry ஏற்பாடு செய்திருந்த BestWeb.LK Awards 2026 போட்டியில், 24 பிரிவுகளின் கீழ் 350க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
போட்டியில் பங்கேற்ற இணையத்தளங்கள் அவற்றின் தொழில்நுட்ப செயலாக்கம், வடிவமைப்புத் தரம், செயல்பாடு, உள்ளடக்கத் தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டன.
தொழில்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், ஒவ்வொரு பிரிவிலும் விருதுகளுக்குத் தகுதியான வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
Lina Manufacturing நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றம், நோயாளிகளை மையமாகக் கொண்ட அணுகுமுறை மற்றும் சிறந்த இணையத்தள வடிவமைப்பு ஆகியவற்றில் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த இரட்டை விருதுகள் எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பானதும் பயனர்களுக்கு எளிதில் பயன்படுத்தக்கூடியதுமான டிஜிட்டல் தளத்தை வழங்குவதன் மூலம், இலங்கையின் சுகாதார மற்றும் மருந்துத் துறையில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை முன்னெடுப்பதில் Lina Manufacturing தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.