டிஜிட்டல் அறிவு இடைவெளி: 3.1 பில்லியன் மக்களை பாதிக்கும் புதிய சவால்.




செயற்கை நுண்ணறிவு (AI) வேகமாக வளர்ந்து வரும் நிலையில், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப அறிவு இல்லாமை உலகளவில் பெரும் சவாலாக மாறியுள்ளதாக Huawei மற்றும் GSMA Intelligence இணைந்து வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

“Bridging the Divide: Enhancing Digital Literacy in the AI Era” என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, யுனெஸ்கோவின் Digital Learning Week நிகழ்வை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, உலக மக்கள்தொகையில் சுமார் 96 சதவீதம் பேர் mobile broadband வலையமைப்பின் coverage-க்குள் வாழ்ந்தாலும், சுமார் 3.1 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள்தொகையில் 38 சதவீதம் பேர் இன்னும் mobile internet பயன்படுத்தவில்லை.

இணைய வசதி கிடைப்பது மட்டுமே டிஜிட்டல் இணைப்பை உறுதி செய்ய போதுமானதாக இல்லை என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. டிஜிட்டல் திறன்களின் பற்றாக்குறை, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள நம்பிக்கையின்மை மற்றும் AI தொடர்பான அறிவின்மை ஆகியவை முக்கிய தடைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

AI வழங்கும் வாய்ப்புகளும் சவால்களும்

டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப திறன் இடைவெளியை குறைப்பதன் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 3.5 டிரில்லியன் அமெரிக்க டொலர் கூடுதல் பொருளாதார மதிப்பை உருவாக்க முடியும் என அறிக்கை மதிப்பிடுகிறது. இதில் 90 சதவீதத்துக்கும் அதிகமான பலன்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்குச் செல்லக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, செயற்கை நுண்ணறிவு வசதிகள் குறைந்த சமூகங்களுக்கு டிஜிட்டல் உலகுடன் இணைய உதவும் கருவியாகவும், போதிய அறிவு மற்றும் திறன் இல்லாதவர்களுக்கு புதிய தடையாகவும் அமையக்கூடும் என அறிக்கை எச்சரிக்கிறது.

AI அடிப்படையிலான கருவிகள் மூலம் குறைந்த எழுத்தறிவு கொண்ட பயனர்கள் தட்டச்சு போன்ற சில சிரமங்களைத் தவிர்க்க முடியும். எனினும், AI மற்றும் டிஜிட்டல் தளங்களை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கு தரவு தனியுரிமை, இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அபாயங்களை அடையாளம் காணும் திறன்கள் அவசியம் என அறிக்கை வலியுறுத்துகிறது.

மேலும், Generative AI தொடர்பான திறன்கள் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது.

அடிப்படை டிஜிட்டல் பயிற்சிகள் மற்றும் முறையான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் போதுமான அளவில் முன்னெடுக்கப்படாவிட்டால், AI தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சி தற்போதுள்ள டிஜிட்டல் மற்றும் சமூக இடைவெளிகளை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அறிக்கை எச்சரிக்கிறது.

இதனால், இணைய இணைப்பை விரிவுபடுத்துவதுடன், மக்கள் அந்த இணைப்பை நம்பிக்கையுடனும் பாதுகாப்பாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்துவதற்குத் தேவையான டிஜிட்டல் மற்றும் AI திறன்களை மேம்படுத்துவதும் முக்கியமானதாகும்.