சமூக ஊடகப் பதிவு தொடர்பான வழக்கில் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பதற்கான சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் நேற்று (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜனாதிபதி சட்டத்தரணிக
ளான பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமரப்பெரும ஆகியோர் விசேட இராஜதந்திரத் தூதுவர்களாக செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் தலையீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியில், இரு சட்டத்தரணிகளும் சவூதி அரேபியாவுக்குப் பயணித்து அனோஜன் சிவராசாவின் வழக்கில் சட்ட மற்றும் இராஜதந்திர ரீதியான தலையீடுகளை மேற்கொள்ளவுள்ளனர். அவர்கள் தங்களது பயணச் செலவுகளை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனோஜன் சிவராசாவுக்கான நிவாரணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமரப்பெரும ஆகியோரை சவூதி அரேபியாவுக்கு அனுப்ப அரசாங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை (22) தீர்மானித்திருந்தது. இதற்கான அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார்.
முன்னாள் மாலைத்தீவு ஜனாதிபதியுடன் சந்திப்பு
இந்த இராஜதந்திர முயற்சியின் முதற்கட்டமாக, பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமரப்பெரும ஆகியோர் நேற்று மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத்தை சந்தித்து அனோஜன் சிவராசா தொடர்பான விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
சந்திப்பின்போது, அனோஜனின் சமூக ஊடகப் பதிவு இஸ்லாமிய சமூகத்துக்கு பாரதூரமானதாகத் தாம் கருதுவதாக முகமது நஷீத் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, மனிதாபிமான அடிப்படையில் அவரது உயிரைக் காப்பதற்கான முயற்சிகளுக்கு தம்மால் இயன்ற ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மாலைத்தீவில் இடம்பெற்ற இந்த சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டமாக சவூதி அரேபியாவுக்குப் பயணித்து, அனோஜனின் சட்ட பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட சவூதி அதிகாரிகளுடன் கலந்துரையாடி, கிடைக்கக்கூடிய சட்ட மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் குறித்து நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனோஜன் சிவராசாவின் வழக்கில் சட்ட, இராஜதந்திர மற்றும் மனிதாபிமான ரீதியான வழிமுறைகள் மூலம் நிவாரணம் பெறுவதற்கான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
