1980களின் Retro AI புகைப்படங்கள் வைரல்: பின்னணியில் அதிகரிக்கும் மின்சாரம், நீர் பயன்பாடு

 


சமூக வலைத்தளங்களில் தற்போது 1980களின் ‘Retro Style’ புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 1980களில் பிரபலமாக இருந்த தலைமுடி அலங்காரம், பழைய பாணி ஆடைகள், ஸ்டுடியோ பின்னணி உள்ளிட்ட அம்சங்களுடன் தங்களது புகைப்படங்களை மாற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த புகைப்படங்களை உருவாக்குவதற்கு பெரிய அளவில் தொழில்நுட்ப அறிவு தேவையில்லை. ChatGPT உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளில் புகைப்படத்தை பதிவேற்றி, அதனை 1980களின் பாணியில் மாற்றுமாறு கட்டளையிட்டால் போதுமானதாக உள்ளது. சில AI கருவிகளே இதற்கான ‘Prompt’-களையும் வழங்குகின்றன.

இதனால், ஒரே நபர் பல்வேறு பாணிகளில் ஏராளமான AI புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

AI புகைப்படங்களுக்குப் பின்னால் என்ன நடக்கிறது?

AI மூலம் புகைப்படம் உருவாக்கப்படும்போது, பயனரின் கட்டளை மற்றும் புகைப்படத் தரவுகள் முதலில் தொலைதூர தரவு மையங்களில் உள்ள கணினி அமைப்புகளுக்கு அனுப்பப்படுகின்றன.

அங்கு நெட்வொர்க் மற்றும் சேமிப்பு வசதிகள் பயன்படுத்தப்படுவதுடன், புகைப்படத்தில் பாதுகாப்பு விதிகளுக்கு முரணான உள்ளடக்கம் உள்ளதா என்பதும் சில அமைப்புகளில் பரிசோதிக்கப்படுகிறது.

அதன் பின்னர் புகைப்படத்தை உருவாக்குவதற்கான முக்கிய கணினி செயல்முறை இடம்பெறுகிறது. இதற்காக GPU உள்ளிட்ட சக்திவாய்ந்த செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த செயலிகள் கணிசமான மின்சாரத்தை பயன்படுத்துவதுடன் வெப்பத்தையும் உருவாக்குகின்றன. அந்த வெப்பத்தை கட்டுப்படுத்த தரவு மையங்களில் குளிரூட்டும் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. சில தரவு மையங்களின் குளிரூட்டும் முறைகளில் தண்ணீரும் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு AI புகைப்படத்திற்கு எவ்வளவு மின்சாரம்?

AI மூலம் ஒரு புகைப்படத்தை உருவாக்குவதற்கான மின்சார நுகர்வு, பயன்படுத்தப்படும் AI மாடல், வன்பொருள் மற்றும் தரவு மையத்தின் செயல்திறன் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.

சில மதிப்பீடுகளின்படி, ஒரு AI புகைப்படத்தை உருவாக்குவதற்கு சுமார் 1.2 வாட்-மணிநேரம் மின்சாரம் தேவைப்படலாம். எனினும், வேறு ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகளில் ஒரு படத்திற்கான நுகர்வு 0.1 முதல் 4 வாட்-மணிநேரம் வரை மாறுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AI நிறுவனங்களின் API விலையை அடிப்படையாகக் கொண்ட சில கணக்கீடுகளின்படி, 1024 × 1024 பிக்சல் அளவிலான 10 AI படங்களை உருவாக்குவதற்கான செலவு தரத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. குறைந்த, நடுத்தர மற்றும் உயர்தர படங்களுக்கான செலவுகளும் வேறுபடுகின்றன.

எனினும், இவை AI சேவையின் அடிப்படை கணினிச் செலவுகளாகும். மின்சாரம், குளிரூட்டல், நீர், தரவு சேமிப்பு மற்றும் பிற உள்கட்டமைப்பு செலவுகள் தனித்தனியாக இருக்கலாம்.

கோடிக்கணக்கான படங்கள் உருவாகும்போது தாக்கம் அதிகரிக்கும்

ஒரு நபர் ஒன்று அல்லது இரண்டு AI புகைப்படங்களை உருவாக்குவதால் ஏற்படும் வள நுகர்வு தனிப்பட்ட அளவில் சிறியதாக இருக்கலாம்.

ஆனால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் AI மூலம் படங்களை உருவாக்கி, மீண்டும் மீண்டும் புதிய படங்களை உருவாக்கும்போது, அதன் ஒட்டுமொத்த தாக்கம் அதிகரிக்கக்கூடும்.

AI பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்குத் தேவையான தரவு மையங்கள், கணினி வளங்கள், மின்சாரம் மற்றும் சில குளிரூட்டும் அமைப்புகளுக்கான நீர் பயன்பாடும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால், சமூக வலைத்தளங்களில் சில விநாடிகளில் உருவாகும் ஒரு AI புகைப்படத்திற்குப் பின்னால், கணினி வளங்கள் மட்டுமன்றி மின்சாரம், தரவு மைய உள்கட்டமைப்பு மற்றும் நீர் போன்ற வளங்களின் பயன்பாடும் இடம்பெறுகிறது என்பதே கவனிக்க வேண்டிய விடயமாக உள்ளது.