சீன ஜனாதிபதி Xi Jinping, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அழைப்பின் பேரில் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
செப்டெம்பர் 23 முதல் 25ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த விஜயம், Xi Jinping நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வொஷிங்டனுக்கு மேற்கொள்ளும் முக்கியமான விஜயமாக அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் ஏனைய முக்கிய விவகாரங்கள் தொடர்பில் இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.
சிவப்பு கம்பள வரவேற்பு
Xi Jinping மற்றும் அவரது மனைவி Peng Liyuan ஆகியோரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் வரவேற்றனர்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வில் இராணுவ மரியாதைகளும் இடம்பெற்றன. வெள்ளை மாளிகையின் தகவலின்படி, வரவேற்பு நிகழ்வில் அமெரிக்க ஆயுதப் படைகளின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 479 இராணுவப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களுக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்புகள் இடம்பெறுகின்றன.
அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம் நீட்டிப்பு
Xi Jinping-ன் விஜயத்திற்கு முன்னதாக அமெரிக்காவும் சீனாவும் தற்போதைய வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்க இணங்கியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நவம்பர் 10ஆம் திகதி காலாவதியாகவிருந்த இந்த வர்த்தக இடைநிறுத்தம் தற்போது 2027 ஜனவரி 10ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் மேலும் விரிவான வர்த்தக ஒப்பந்தமொன்றை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு கூடுதல் கால அவகாசத்தை வழங்குவதே இந்த நீட்டிப்பின் நோக்கமாக இருப்பதாக பெசன்ட் தெரிவித்துள்ளார்.
சீன தரப்பும் விரிவான அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவை முன்வைத்துள்ளதாகவும், அதனை வாஷிங்டன் பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தகத்தைத் தாண்டி பல விடயங்கள் குறித்து பேச்சு
ட்ரம்ப் - Xi Jinping சந்திப்பில் வர்த்தகம் மட்டுமன்றி செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், அரிய கனிமங்கள், தாய்வான் மற்றும் ஈரான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சர்வதேச மற்றும் இருதரப்பு விவகாரங்கள் இடம்பெறக்கூடும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை நிர்வகிப்பதற்கான மேலதிக பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Xi Jinping-ன் அமெரிக்க விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளில் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.