த்விஷா சர்மா வரதட்சணை தொடர்பாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது தந்தை நவ்நீதி சர்மா குற்றம்சாட்டியிருந்தார். மேலும், அவர் வசித்து வந்த வீட்டின் கண்காணிப்பு கெமரா காட்சிகளிலும் முரண்பாடுகள் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தலைமறைவான த்விஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் முன்னாள் மாவட்ட நீதிபதியான அவரது தாயார் கிரிபாலா சிங் ஆகியோருக்கு எதிராக பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ, போபால் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
அதில், கணவர் மற்றும் மாமியார் ஆகியோரால் தொடர்ந்து வழங்கப்பட்டதாகக் கூறப்படும் மன ரீதியான துன்புறுத்தல் மற்றும் கொடுமை காரணமாக த்விஷா சர்மா தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
த்விஷா பெற்ற மனநல ஆலோசனை தொடர்பான ஆவணங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் உள்ளிட்டவை முக்கிய ஆதாரங்களாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
திருமணத்திற்குப் பின்னர் த்விஷா தொடர்ந்து மன ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும், அவரது கணவர் பல சந்தர்ப்பங்களில் அவரை அவமதித்து தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
மேலும், தனது மகனின் நடவடிக்கைகளுக்கு கிரிபாலா சிங் ஆதரவளித்ததாகவும், த்விஷா தனது கணவர் தொடர்பில் முறைப்பாடு செய்யும் சந்தர்ப்பங்களில் மகனுக்கு ஆதரவாக அவர் செயற்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
த்விஷாவுக்கு நீண்டகாலமாக மன உளைச்சலை ஏற்படுத்துவதே இருவரின் நோக்கமாக இருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2026 ஏப்ரல் மாதத்தில் த்விஷா கர்ப்பமடைந்த நிலையில், குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் மற்றும் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கர்ப்பத்தைத் தொடர்வது தொடர்பில் அவர் குழப்பத்தில் இருந்ததாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
பின்னர் கர்ப்பத்தை கலைக்க த்விஷா முடிவு செய்ததாகவும், இதன் காரணமாக அவருக்கும் கணவர் மற்றும் மாமியாருக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்ததாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 12ஆம் திகதி இரவு தற்கொலை செய்துகொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் த்விஷா தனது நாத்தனார் ராஷி அப்ரோலுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் வாட்ஸ்அப் குறுஞ்செய்தியும் முக்கிய ஆதாரமாக சேர்க்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில், தன்னை அமைதியாக இருக்க விடுமாறு அவர் குறிப்பிட்டிருந்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தி த்விஷா கடுமையான மன உளைச்சலில் இருந்ததை வெளிப்படுத்தும் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுவதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், த்விஷாவின் ஐபோன், சிசிடிவி காட்சிகள் மற்றும் குரல் மாதிரிகள் தொடர்பான தடயவியல் பரிசோதனை முடிவுகளுக்காக சிபிஐ காத்திருக்கிறது.
.jpeg)