இரத்தப் புற்றுநோயால் பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழப்பு!!

 


‘கஜினி’, ‘வீரம்’ புகழ் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்

தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் வில்லன் கதாபாத்திரங்கள் மூலம் பிரபலமான நடிகர் பிரதீப் ராவத், இரத்தப் புற்றுநோய் காரணமாக தனது 74ஆவது வயதில் காலமானார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரதீப் ராவத், தொடர்ச்சியான சிகிச்சையின் பின்னர் நோயிலிருந்து மீண்டு வந்திருந்தார்.

எனினும், சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (04) மாலை அவர் உயிரிழந்ததாக அவரது மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது இறுதிச்சடங்குகள் புதன்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதீப் ராவத்தின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1952ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி பிறந்த பிரதீப் ராவத், பி.ஆர். சோப்ராவின் புகழ்பெற்ற ‘மகாபாரதம்’ தொலைக்காட்சி தொடரில் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் நடித்து தனது கலைப் பயணத்தை ஆரம்பித்தார்.

பின்னர், ‘லகான்’ திரைப்படத்தில் தேவா சிங் சோதி கதாபாத்திரத்தில் நடித்த அவர், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கஜினி’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.

அதேபோல், அஜித் நடித்த ‘வீரம்’ திரைப்படத்திலும் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழ், இந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் போஜ்புரி மொழித் திரைப்படங்களிலும் பல்வேறு வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரதீப் ராவத்தின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.