சிறையில் உள்ள சகோதரனை பார்வையிடச் சென்ற இருவர் போதைப்பொருளுடன் கைது!!

 


மிக்ஸ் ரைஸ் உணவில் மறைத்து களுத்துறை சிறைச்சாலைக்கு ஹெரோயின் கொண்டு செல்ல முயன்ற இருவர் கைது

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவருக்கு வழங்குவதற்காக ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற இருவர் அங்குருவாத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மில்லனிய – படகொட வீதியில் பொலிஸாரால் அமைக்கப்பட்ட வீதித் தடையில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இருவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அடுத்து மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பொலிஸார், இரண்டு ‘மிக்ஸ் ரைஸ்’ உணவுப் பொதிகளுக்குள் மிளகாய் பேஸ்ட் வைக்கப்பட்டிருந்த சிறிய பொலித்தீன் உரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12,400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் களுத்துறை சிறைச்சாலையில் உள்ள தமது சகோதரரை பார்வையிடுவதற்காக இவர்கள் சென்றுகொண்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் அவர்களது கைப்பேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக முன்னர் போதைப்பொருள் தொடர்பான பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.