காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து, திமுக சார்பில் நேற்று (03) தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழக அரசை கடுமையாக விமர்சித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக தவெக அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதற்காக இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு அதிகளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டனர். பின்னர், திமுக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருடன் பொலிஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
கைதுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்,
“நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றி வரும் அரசை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது குறித்தும் பேசினேன். மேகதாது விவகாரத்தில் குரல் கொடுக்க முடியாத அரசாக இருப்பதாக விமர்சித்தேன்.
எனது பேச்சை திசை திருப்பும் வகையில், நான் பேசாத கருத்துகளை பேசியதாக பொய்ப் பிரச்சாரம் செய்து, பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதற்கு நான் பயப்படவில்லை. சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை பொலிஸார் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(குறிப்பு: இந்த செய்தியில் இடம்பெறும் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் தரப்பினரின் கருத்துகள் அவரவர் நிலைப்பாடுகளாகும்.)
