நாட்டின் பிரதான வீதிகளில் மோட்டார் சைக்கிள்களை இயக்குவதற்காக விசேட போக்குவரத்து ஒழுங்கொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தின் களுவாஞ்சிகுடி நகரில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் வீதி விபத்துகளில் கணிசமான அளவு மோட்டார் சைக்கிள் விபத்துகளாக காணப்படுவதால், அவற்றைக் குறைக்கும் நோக்கில் இந்த புதிய ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆண்டுதோறும் வீதி விபத்துகளால் சுமார் 2,500க்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும், 2025 ஆம் ஆண்டில் மட்டும் 2,750 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடந்த சில ஆண்டுகளில் மோட்டார் சைக்கிள் விபத்துகளால் பெருமளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், வீதி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைப்பதற்கு மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பான சவால்களுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, இலங்கையில் முதன்முறையாக களுவாஞ்சிகுடி நகரில் பிரதான வீதியின் ஒரு பகுதி மோட்டார் சைக்கிள்களுக்காக ஒதுக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தப் பாதை வெறும் வெள்ளைக் கோடுகளால் பிரிக்கப்படாமல், பாதுகாப்பு தடுப்புகள் (Barriers) அமைக்கப்பட்டு உருவாக்கப்படும் எனவும், மோட்டார் சைக்கிள் போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதிகளில் இந்த முறை விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
