பல மாகாணங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!!



 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப்பகுதிகளில் நாள்பட்ட மேகமூட்டமான வானிலையும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்றும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.