சீரற்ற வானிலைக்கு மத்தியில் புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை நடத்த விசேட ஏற்பாடுகள்
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (05) நடைபெற்றுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக பரீட்சை நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 06, 07 மற்றும் 08ஆம் திகதிகளில் கடும் மழை அல்லது சீரற்ற காலநிலை நிலவினால், பரீட்சை நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செயல்பாட்டு அறையில் விசேட கண்காணிப்பு பிரிவொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளப்பெருக்கு போன்ற அவசர நிலை ஏற்பட்டால் மாணவர்களை பாதுகாப்பாக பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக படகுகள் மற்றும் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டும் உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்ட மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் படகுகளை பயன்படுத்தியிருந்தது.
2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.