2027 மார்ச்சில் IMF ஒப்பந்தம் நிறைவு – ரணில் வெளியிட்ட முக்கிய தகவல்


  வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) இலங்கையின் தற்போதைய ஒப்பந்தம் நிறைவடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2028 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை மீண்டும் வெளிநாட்டு கடன்களைச் செலுத்த வேண்டிய நிலை உருவாகும் என்பதால், நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வருட இறுதிக்குள் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என மத்திய வங்கி எதிர்பார்ப்பதாகவும், அந்த இலக்கை அடைந்தாலும் மேலும் சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட வேண்டிய தேவை ஏற்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

எனவே, தேவையான அந்த 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை எவ்வாறு திரட்டுவது என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவான மற்றும் நீண்டகால வேலைத்திட்டமொன்றை வகுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எழுதிய “யுத தெக்கட உர தீ” என்ற நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.